eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / அரசியல் ஆய்வு
என்னதான் நடந்தது ராஜபக்ச சகோதரர்களுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில்? பரபரப்பான தகவல்கள்
Sarath ராஜபக்ச சகோதரர்களுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான மோதலுக்கான காரணங்களாக பொறாமை, ஈகோ, அகங்காரம், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் பதவி ஆசை ஆகியவை மட்டுமே ஒழிய வேறொன்றுமில்லை.

மகிந்த ராஜபக்ச என்று அழைக்கப்படும் மகிந்த பேர்சிவல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக 2005ம் ஆண்டு நவம்பர் 18ம் திகதி தெரிவு செய்யப்பட்டார்.

அவர் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் வரவிருந்த யுத்தத்தை கருத்தில் கொண்டு இரண்டு மிக முக்கியமான நியமனங்களை வழங்கினார்.

ஒன்று தனது இளைய சகோதரனான கோத்தபய ராஜபக்சவை பாதுகாப்புச் செயலாளராக்கியது மற்றொன்று சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக்கியது.

1971ல் இராணுவத்தில் சேர்ந்த கோத்தபய ராஜபக்ச 20 ஆண்டுகள் கடமையாற்றி 1991ல் இராணுவத்தை விட்டு விலகி அமெரிக்க லொத்தர் ஒன்றின் மூலமாக அமெரிக்கா சென்று கணினி வல்லுநராக 14 ஆண்டுகள் பணியாற்றியவர். தனது சகோதரனுக்காக இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

அவரின் கட்டளையின் படியே சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். 2005 டிசம்பர் 6ல் தனது 55ம் வயதில் ஓய்வு பெறவிருந்தார் சரத் பொன்சேகா. ஆனால் கோத்தபய ராஜபக்சதான் தனது மூத்த சகோதரனான மகிந்த ராஜபக்சவை வற்புறுத்தி சரத்தை இராணுவத் தளபதியாக்கியதுடன் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அவருக்கு ஓய்வு பெறும் வயதையும் தாண்டி பதவி நீட்டிப்பு வழங்க காரணமாகவிருந்தார்.

அப்போது இராணுவத் தளபதியாகவிருந்த மேஜர் ஜெனரல் சாந்த கொட்டகொட பிரேசில் நாட்டுக்கு தூதுவராக அனுப்பப்பட்டார். சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

சரத் பொன்சேகா ஒரு சிறந்த இராணுவ வீரன் என்பதிலும் சிறந்த திட்டமிடல் தளபதி என்பதிலும் எல்லோருக்கும் ஒற்றுமையான கருத்து இருந்தது. ஆனால் வேறு சில விடயங்கள் தான் அவர் இராணுவத் தளபதியாக முடியாமல் தடுத்த காரணங்களாக இருந்தன.

அவற்றில் முக்கியமானது அவருக்குள் பூதாகரமாக விருந்த ஈகோதான். அவருக்கும் அப்போதைய கடற்படைத் தளபதியான வசந்த கரன்னகொடவுக்கும் இருந்த பிரச்சனை நாடறிந்தது. அதேபோன்று தான் இன்னொறு சிறந்த தளபதியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவுக்கும் சரத் பொன்சேகாவுக்குமிடையிலும் பிரச்சனைகள் இருந்து வந்தன.

அத்துடன் சரத் பொன்சேகாவின் மிகப் பாரிய திமிரும் அதற்கு வழி கோணியது. சரத் தன்னை ஒரு நவீன அலெக்சாண்டர், நெப்போலியன், ஹனிபல்,ஜுலியஸ் சீசர் ஆகியோரின் கலவை என்று தன்னைத் தானே நினைத்துக் கொண்டார். நான் என்ற அகங்காரமும் ஈகோவும் சரத்தின் கவச குண்டலங்களைப் போன்று செயல்ப்பட்டன.

அத்துடன் மிக மோசமான மனித உரிமை மீறல் விவகாரங்களும் பாலியல் அத்து மீறல்களும் சரத் இராணுவத் தளபதியாகும் வாய்ப்புக்கு குறுக்கே நின்றன.

வடமராட்சி லிபரேசன் ஒப்பரேசன் நடவடிக்கையின் போதும் பின்பு 90களில் அவர் அம்பாறை மாவட்டத்தின் கட்டளைத் தளபதியாக இருந்த போதும் மெருமளவான தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் மனித உரிமை அமைப்புகளால் மிக மோசமாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

சந்திரிகா குமாரதுங்காவும் ரணில் விக்கிரமசிங்கவும் சரத்தை இராணுவத் தளபதியாக்கும் அவரது நியாயமான சந்தர்ப்பங்களை மேற்சொன்ன காரணங்களுக்காக தவிர்த்தனர்.

அத்துடன் சரத் இராணுவப் புரட்சியில் ஈடுபடலாம் என்கின்ற சந்தேகங்களும் முந்தைய தலைவர்களுக்கு இருந்தது. இவை அனைத்தும் தான் சரத் இராணுவத் தளபதியாகும் முயற்சிகளுக்கு குறுக்கே நின்றன. இவ்விடயத்தில் சரத்துக்கு அரசியல் தலைவர்கள் மீது கடும் கோபம் இருந்ததுமுண்டு.

இந்த விடயங்களை அறிந்திருந்த மகிந்த ராஜபக்சவும் ஆரம்பத்தில் சரத்தை இராணுவத் தளபதியாக்குவதற்கு தயங்கினாராம் ஆனாலும் சரத்தை தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கோத்தபய உறுதி அளித்ததன் பேரில் தான் அவரை இராணுவத் தளபதியாக்கினார் மகிந்த ராஜபக்ச.

சரத் ஒரு வருடம் இராணுவத் தளபதியாக சேவை செய்ததும் அவரை அந்தப் பணியிலிருந்து நீக்க மகிந்த விரும்பினார் ஆனால் கோத்தபய மீண்டும் மீண்டும் தலையிட்டு பதவி நீட்டிப்பு வழங்கினார்.

அதற்கான காரணங்கள் பல. இருவரும் கொழும்பு ஆனந்தா கல்லூரி மாணவர்கள். சரத் இராணுவத்தின் மூன்றாவது அணியில் உள்வாங்கப்பட்ட போது கோத்தபய நான்காவது அணியில் உள்வாங்கப்பட்டவர். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. இருவரும் பல முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாகப் பணியாற்றியிருக்கிறார்கள். அவற்றில் முக்கியமானவை லிபரேசன் ஒப்பரேசன் மற்றும் மிட்நைட் எக்ஸ்பிரஸ் நடவடிக்கைகள்.

கோத்தபய இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபோது சரத் கேணலாகவும் கோத்தபய லெப். கேணலாகவும் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் இருவரினதும் பொதுவான கொள்கை தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதுதான். இவர்கள் இருவரும் எவ்வாறு புலிகளை அழிக்க விருப்பப் பட்டனரோ அதேபோன்று புலிகளும் இவர்கள் இருவரையும் அழிக்க முயன்றனர். அதிர்ஷ்ட வசமாக இருவரும் தப்பித்துக் கொண்டது வரலாறு.

ஆரம்பத்தில் மிகச் சிறப்பாக இருந்த சரத் கோத்தபய உறவு போகப் போக தேய்மானமடையத் தொடங்கியது. ஏன் ஒரு பட்சத்தில் இவர்கள் இருவரினதும் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கூட ஒரு வதந்தி உலா வந்தது. ஆனால் வெறும் வதந்தியோடு நின்றுபோனது.

இருவருக்குமான உறவு முருகலடைந்ததுக்கு சரத்தே முக்கிய காரணம் என்று இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னொரு காலத்தில் தனக்கு கீழ் வேலை பார்த்த தனது இளநிலை அதிகாரியான கோத்தபய ராஜபக்ச தன்னை சல்யூட் செய்த காலம் போய் தற்போது பாதுகாப்புச் செயலாளராகவிருக்கும் கோத்தபயவிற்கு தான் சல்யூட் செய்வதற்கு ஈகோவாதியான சரத் பொன்சேகா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதைப் பற்றி சரத் தனது சக அதிகாரிகளிடம் குறையாகக் கூறியது காலத்துக்கு காலம் கோத்தபயவின் காதுகளுக்கு சென்று கொண்டுதானிருந்தது. இவை அனைத்தையும் புலிகளுடனான யுத்தம் முடியும் வரை பொறுத்துக் கொண்டார் கோத்தபய என்று கூறப்படுகிறது. ஏனென்றால் யுத்தத்தை கொண்டு நடத்துவதற்கு சரத் தான் சிறந்த பேர்வழி என்று கோத்தபய கருதியதால் அவற்றை பொறுத்துக் கொண்டார் கோத்தபய என்றும் தெரிய வருகிறது.

அத்துடன் கடற்படை மற்றும் விமானப் படையின் முக்கியத்துவத்தையும் அவர்களின் பங்களிப்பையும் வெளிப்படையாகவே புறக்கணித்தார் சரத் பொன்சேகா. முப்படைத் தளபதிகளுக்குமிடையிலான பிரச்சனையை சாதுர்யமாக கையாண்டு இராணுவ நடவடிக்கை சிறப்பாக நடைபெற உதவியது கோத்தபய ராஜபக்ச தான்.

ஈழப் போர் நான்கில் கடற்படை மற்றும் விமானப் படையின் பங்கு எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்தியது என்பது எல்லோரும் அறிந்ததே ஆனால் இராணுவ வெற்றிகள் அனைத்துக்கும் இராணுவத்தினரே காரணம் என்பதுதான் சரத்தின் எண்ணமாகவிருந்தது அதனால் அவர் மற்றைய இரண்டு தளபதிகளையும் புறக்கணித்தார் என்பதும் வெள்ளிடைமலை.

அதேபோன்று நீண்ட காலமாக இராணுவத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையான நீண்ட காலம் சேவையாற்றியவர்களை தரம் உயர்த்துவது என்ற வழக்கத்திலிருந்து விலகிய சரத் சிறப்பாக பணியாற்றியவர்களையே தரம் உயர்த்தினார். அத்துடன் தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காக சில இராணுவத் தளபதிகளையும் பழி வாங்கினார்.

இதற்கு சிறந்த உதாரணமாக கிழக்கு மாகாணத்தை வெற்றி கொண்டவரான பராக்கிரம பன்னிபிட்டியவின் பாதுகாப்பை குறைத்து அவரை நீதிமன்ற படி ஏறவைத்தார் சரத். பின்னர் அவர் மீது மிக அற்பமான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவரை அவமானப்படுத்தினார். கெடுவான் கேடு நினைப்பான் என்பது சரத் விசயத்தில் மிகச் சரியாகவே இருக்கிறது. சரத்தும் தற்போது அதே போன்றதொரு நிலையிலேயே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் ஒரு சில பேட்டிகளின் மூலமே அரசியல்வாதிகளின் மீதான தனது வெறுப்பையும் தனது அகங்காரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அவர் ஒரு முறை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று வர்ணித்திருந்தார். அதற்காக இந்தியா சரத்தை கடுமையாக கண்டித்ததோடு அவரிடம் மன்னிப்பும் கோரியிருந்தது. ஆனால் சரத் மறுக்கவே பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோத்தபயவே மறுப்பும் மன்னிப்பும் கேட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

அதே போன்று கனடாவின் நேசனல் போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய பொன்சேகா சிறுபான்மை இனத்தவர்கள் அதிகப்பிரசிங்கித்தனமாக அதிகமான உரிமைகளை கேட்கக் கூடாது என்றும் கூறியிருந்தார்.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின் வட கிழக்கில் இராணுவம் அடைந்த வெற்றிகள் அவரது புகழ் தெற்கில் பல்கிப் பெருகிட உதவி செய்தது. ஒரு கட்டத்தில் மகிந்த ராஜபக்ச இவ்விடயத்தில் தனது பாதுகாப்பின்மையை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் கோத்தபய மீது இருந்த அசாத்திய நம்பிக்கை காரணமாக எதையும் வெளிப்படையாக செய்யவில்லை மகிந்தர்.

மேற்சொன்னவை அனைத்தும் சிறிய காரணங்களே தவிர ராஜபக்ச சகோதரர்களுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான உறவுக்கு பங்கம் விளைவிக்கவில்லை.

ஆனால் பின் வரும் காரணங்கள் தான் உறவு முறிய வெழி கோலியது என்றால் மிகையாகாது. அவை பின்வருமாறு,

ஈழப் போரின் இறுதி நாட்களில் அதாவது மே 16 அன்று வெளிநாட்டிலிருந்த மகிந்த ராஜபக்சவிற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்று தவறான தகவல் வழங்கப்பட்டது. வெற்றிக்களிப்புடன் நாடு திரும்பிய மகிந்த ராஜபக்ச தன் தாய் மண்ணை முத்தமிட்டு தனது தாய்நாட்டுப் பற்றை வெளிப்படுத்தினார். ஆனால் நாடு திரும்பிய பின்னர் தான் அது தவறான தகவல் என்று தெரிய வந்தது மகிந்தவிற்கு.

பின்னர் 19ம் திகதி அன்று பாராளுமன்றத்தில் ஜானாதிபதி உரையின்போது பிரபாவின் மரணம் உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஆனாலும் அதுவும் கைகூடவில்லை ஏனென்றால் பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்துமாறு சரத் பொன்சேகா கேட்டுக் கொண்டபோது அதற்கு அவர் மறுத்துவிட்டார். ஜனாதிபதி உரை முடிவடைந்த பின்னர் பிரபாவின் மரணம் பற்றிய செய்தி இராணுவத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இம்முறை அதை நாட்டுக்கு அறிவித்தது மகிந்த ராஜபக்ச அல்ல சரத் பொன்சேகா தான்.

அதன் பின்னர் சரத் மட்டுமே இராணுவ வெற்றிக்கு முழுமையான காரணம் என்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டது. மற்றைய தளபதிகளும் கடற்படை, விமானப்படை தளபதிகளும், பாதுகாப்புச் செயலாளரும் ஏன் முப்படைகளினதும் தலைமைத் தளபதியான மகிந்த ராஜபக்ச கூட செய்திகளில் புறக்கணிக்கப் பட்டார்.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான சில பத்திரிகைகள் அவரை முதன்மைப் படுத்தி பிறரை புறக்கணித்தன. இச்சம்பவங்கள் சரத் மீதான வெறுப்புணர்வை மகிந்த சகோதரர்களுக்கு ஏற்படுத்தியது.

இராணுவ வெற்றிகளில் சரத்தின் பங்கு பிரதானமானதுதான் என்றாலும் கோத்தபய ராஜபக்சவே இராணுவத்திட்டத்தை வரைந்து அதை செவ்வனே செயல்படுத்தி வந்தார். முப்படைகளினதும் சேவையை ஒருங்கிணைத்தார் . உலக நாடுகள் பலவற்றினதும் இராணுவ உதவிகளைப் பெற்று அதை ஆயுதங்களாக இலங்கை நோக்கி படையெடுக்க வைத்தவர். அத்தோடு பசில் ராஜபக்ச. லலித் வீர துங்கவுடன் இணைந்து இந்தியாவின் நல்லெண்ணத்தை வென்றெடுப்பதற்கு காரணமாக இருந்ததும் கோத்தபய ராஜபக்ச தான்.

அதேபோன்று அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியது மகிந்த ராஜபக்சதான். அதுநாள் வரை எந்த ஜனாதிபதிகளும் துணியாத ஒரு முயற்சியை உலகின் அழுத்தம் அனைத்துக்கும் அசராது முகம் கொடுத்தவாறு செயல்படுத்தியது மகிந்தர்தான்.

கடைசி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீதான சரத்தின் கடுமையான நிலைப்பாடுதான் வெளிநாடுகளின் கடுமையான கண்டிப்பும் விமர்சனமும் இலங்கை அரசாங்கத்தின்மீது ஏற்பட காரணமாக இருந்தது. கடைசி வரை அவர்கள் முகாம்களிலேயே அடைக்கப்பட வேண்டும் என்று சரத் வலியுறுத்தினார். அதேபோன்று இராணுவத்தின் பலத்தையும் 1 இலட்சத்திலிருந்து 3 இலட்சமாக்கும்படி சரத் கோரினார். சரத்தின் புகழ் பாடிய ஐந்து பத்திரிகையாளர்களுக்கு கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிடமிருந்து கொலை மிரட்டல் விடப்பட்டதாகக் கூறிய சரத் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கினார்.

சரத் மீதான கோபம் மகிந்த சகோதரர்களுக்கு அதி உச்ச நிலையை அடைந்ததற்கு மூன்று சம்பவங்கள் தான் முத்தாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையாகாது. அவையாவன,

முதலாவது, இலங்கை அரசாங்கத்துக்கு சமாந்தரமான ஒரு அதிகார மையம் சரத்தை மையமாக வைத்து இயங்கியது. சரத் தன் இஷ்டத்துக்கு ஏற்றால் போல் பாதுகாப்பு நடைமுறைகளை மாற்றினார். சரத்துக்கு ஆதரவான அதிகாரிகள் அதை செயல்படுத்திக் கொண்டிருந்தனர். ஒரு சமயம் சரத்தின் ஆட்கள் தற்போதைய இராணுவத் தளபதியான ஜகத் ஜெயசூரியவைக் கூட கைது செய்ய முயன்றனர்,ஆனால் அது கை கூடவில்லை.

இரண்டாவது, சரத்தின் மருமகன் தனுன திலகரத்னவின் ஆயுத முகவர் நிறுவனம் ஒன்றின் மூலமாக இலங்கை இராணுவத்துக்கு ஆயுதம் வாங்கியதில் தனுனவுக்கு இலாபமாக ஒரு ரவைக்கு 2 சென்ட்ஸும் ஒரு எறிகணைக்கு 20 டொலர்கள் பணமும் இலஞ்சமாக பெற முயன்றார்.

அப்படியாக யுத்தம் முடிவடைந்த சிறிது காலத்தின் பின்னர் எறிகணைகளையும் ரவைகளையும் சுமந்து வந்த கப்பல் ஒன்றை கோத்தபய ராஜபக்ச அவசியமில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார். இச்சம்பவமும் சரத் பொன்சேகாவுக்கு மகிந்த கம்பனி மீதான கோபத்தை எகிற வைத்தது.

பழி வாங்கும் சந்தர்ப்பம் ஒன்றுக்காக காத்திருந்த சரத் பொன்சேகாவுக்கு விரைவிலேயே வந்தது ஒரு வாய்ப்பு. மகிந்தவின் மனைவியும் நாட்டின் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ச நாக விகாரையை தொழுவதற்காக பலாலி சென்றடைந்தார். அங்கு அவரை வரவேற்ற இராணுவ அதிகாரிகள் சரத் பொன்சேகாவின் கட்டளைப்படி தேவையில்லாத அலைச்சல்களுக்கும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கும் அவரை உட்படுத்தினர். இவை அனைத்தும் காலத்துக்கு காலம் மகிந்த கம்பனிக்கு தெரியப்படுத்தப்பட்டு வந்தது.

மூன்றாவது காரணம் தான் பிரதானமானது, இலங்கையின் நட்பு நாடொன்று சரத் இராணுவப் புரட்சியில் ஈடுபடலாம் என்று தனது புலனாய்வுத்தகவல்களை மேற்கோள் காட்டி இலங்கை அரசாங்கத்தை எச்சரித்தது. அவ்வளவுதான் அதுநாள் வரையும் சரத்துக்காக பொறுமை காத்திருந்த கோத்தபய சரத்தை இராணுவத் தளபதி பொறுப்பிலிருந்து விலத்தி அவரை முப்படைகளின் பிரதானி ஆக்கினார். முன்னாள் யாழ் மாவட்ட தளபதியாகவிருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறியை இராணுவத் தளபதியாக்கும் சரத்தின் முயற்சியும் கை கூடவில்லை. கோத்தபய தனக்கு செல்வாக்கான படையினரை சாத்தின் அலுவலகங்களில் ஊடுருவ வைத்து சரத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்தார். கடைசியில் சரத் பொன்சேகா தனது முப்படைகளின் பிரதானி பதவியையும் துறக்க வைக்கப்பட்டார்.

இவர்களுக்கிடையிலான மோதல் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் அரசாங்க அமைச்சர்கள் சரத் பொன்சேகாவை வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கினார்கள். ஆனாலும் மோதலின் வீரியம் சரத்தின் அமெரிக்க பயணத்தின் மூலம் வெளிப்பட்டது. தனது அமெரிக்க நிரந்தர குடியுரிமையை புதுப்பிப்பதற்காக அமெரிக்கா சென்ற சரத் பொன்சேகா தான் இலங்கை இராணுவம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு வாக்கு மூலம் ஒன்றை வழங்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

அவ்வளவுதான் ராஜபக்ச சகோதரர்களின் கோபம் தலைக்கேறியது. சரத் உடனடியாக நாடு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். சரத்தும் நாடு திரும்பினார். அதன் பின்னர் நடந்தது யாவரும் அறிந்ததே.

ஆகவே ராஜபக்ச சகோதரர்களுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான மோதலுக்கான காரணங்களாக பின்வருவனவற்றை கூறலாம். பொறாமை, ஈகோ, அகங்காரம், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் பதவி ஆசை ஆகியவை மட்டுமே ஒழிய வேறொன்றுமில்லை.

By: சாணக்கியன் / tamilulakam
Print this article Posted on 07 May 2010 by EelamTimes
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |