 |
ஆதனங்களை அபகரிக்கும் பாவத்தனங்கள் வேண்டாம்!
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று கேட்கும் அளவிற்கு அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. யுத்த சூழல், விடுதலைப் புலிகள் மீதான பயம் இவற்றினால் அமிழ்ந்து போயிருந்த ஏமாற்றுத் தனங்களும், கபளீகரங்களும், கயமைத்தனங்களும் இப்போது நட்டுவாங்கத்துடன் நடன மாடத் தொடங்கியுள்ளன.
இதில் வேதனையும், கொடுமையும் என்ன வெனில், வன்னி யுத்தத்தில் பேரவலத்தை சந்தித்த மக்களின் சொத்துக்களை, ஆதனங்களை கபளீகரம் செய்யும் பாவத்தனமாகும். 1995இல் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட யுத்த நடவடிக்கை காரணமாக வன்னிக்குச் சென்றவர்கள் ஏராளம். அவர்கள் வன்னிக்குச் சென்றபோது அவர்களின் வீடுகளில், காணிகளில் அவர்தம் உறவினர்களும், உறவினர் அல்லாதோரும் தங்கியும் பராமரித்தும் வந்தனர்.
2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்குமான தொடர்புகள் துண்டாடப்படவும், பல்லாயிரக் கணக்கானவர்களை வன்னி யுத்தம் பலியயடுக்கவும் இங்குள்ள நிலைமை மாறலாயிற்று. அதாவது வன்னியில் தங்கியிருந்தவர்களின் ஆதனங்களில் குடியிருந்தவர்கள், பராமரித்தவர்கள் என்ற வகுதியினரில் ஒரு பகுதியினர் அவர்கள் இறந்து விட்டதாகக் கருதி ஆதனங்களை தங்கள் பெயர்களில் மாற்றிக் கொள்ளும் வேலையை தீவிரப்படுத்தினர்.
வன்னியில் அவர்களுக்கு என்ன நடந்ததோ ஏதுநடந்ததோ அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்ற தகவல்களை தேடி அறியவேண்டியவர்கள், அதிலிருந்து விலகி அவர்கள் திரும்பி வரலாகாது என்ற பிரார்த்தனையோடு ஆதனங்களைத் தங்கள் பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதாக வெளிவரும் தகவல்கள் வன்னி யுத்தத்திலும் கொடூரமானவை.
இத்தகைய ஆதன மாற்றங்கள் வன்னியில் மீளக்குடியமர்ந்த இடங்களிலும் இடம்பெறுவதாக அறியும் போது மானிட வாழ்வு வெறுத்துப் போகின்றது. நீ எதனால் அளக்கின்றாயோ அதனால் நீ அளக்கப்படுவாய் என்ற யேசுபிரானின் தெய் வீக தத்துவத்தை உணர்ந்து கொண்டால், இவை எல்லாம் தேவையற்றவையாகிவிடும்.
இத்தகைய கயமைத்தனங்கள் நடைபெறாமல் இருப்பதை பொறுப்பான பதவியில் இருப்ப வர்கள் உறுதி செய்து கொள்வதும் அவசியம். ஆதனத்தை மாற்றி எழுதுவது ஒன்றும் பாவத் தனமல்ல என்ற நினைப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டவர்கள் நடந்து கொண்டால், இந்த மண்ணில் நிம்மதிக்கும், மும்மாரிக்கும் பெரும் பஞ்சம் நிலவும் கவனம்.
Source: Valampuri
|
|
 |