 |
சேர்... நீங்களுமா... இப்படி???
பேராசிரியர் பீரிஸ் நல்ல மனிதர் என்று கணிக்கப்பட்டவர். அந்தக் கணிப்பு அரசியலுக்கு முன்பானதாக, அதாவது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த காலத்தில் கிடைத்தது.
அந்த நல்ல இயல்பு அரசியல் நுழைவு காலத்திலும் அவரிடம் இருந்ததென்பதை மறுப்பதற்கில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றை தயாரித்தவர். காணி, பொலிஸ், நிதி உள்ளிட்ட விவகாரங்களில் வடக்குக் கிழக்கு மக்களுக்கு அதிகாரம் வழங்குவதாக அந்தத் தீர்வுத் திட்டம் இருந்தது. அரசியல் அமைப்பு விவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் பீரிஸ் தயாரித்த தீர்வுத் திட்டம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதாக இருந்ததோ என்னவோ தெரியவில்லை.
ஆனால் அந்தத் தீர்வுத் திட்டம் பேராசிரியர் பீரிஸ் தமிழ் மக்களுக்கு எதிரானவர் அல்ல. மென்மையானவர். எல்லா மனிதர்களினதும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் என்ற கருத்து நிலைக்கு இடம் தந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்க வினால் அரசியலுக்கு இழுத்துவரப்பட்ட பீரிஸ் பின்னாளில் சந்திரிகா குமாரதுங்கவின் கட்சியில் இருந்து விலகி, ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து கொண்டார்.
அவர் ரணிலுடன் சேர்ந்து கொண்டது கூட இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக என்று கூறப்பட்டது. 2002ஆம் ஆண்டில், அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட போது, பேராசிரியர் பீரிஸூம் அதற்கு உறுதுணையாக இருந்தார்.
தொடர்ந்து அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போதெல்லாம் பேராசிரியர் பீரிஸ் அரச தரப்பிற்கு தலைமை தாங்கினார். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமென வலியுறுத்தினார். பேராசிரியர் பீரிஸ் போன்று இன்னும் ஒரு சிலர் அமைச்சர்களாக இருந்தால், இனப்பிரச் சினைக்குத் உடனடியாகத் தீர்வு கிடைத்துவிடும் என தமிழ் மக்கள் சந்திகளில் நின்று பேசிக் கொண்டனர்.
அத்தகைய ஒருவர் ரணிலையும் கைகழுவி விட்டு ஜனாதிபதி மகிந்தவின் அரசுடன் இணைந்தார். அங்கும் அமைச்சர். இங்கும் அமைச்சர். இப்போது வெளிவிவகார அமைச்சர். விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்பான வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மாறிவிட்டார். மரத்தில் ஏறிவிட்டார். மனித உரிமை பற்றி அமெரிக்கா பேசவேண்டாம் என்கிறார்.
ஐ.நா.சபை உள்விவகாரங்களில் தலையிடக் கூடாதெனக் கண்டிக்கின்றார். மன்னிப்புச் சபையை சாடுகிறார். அட! சேர்... நீங்களுமா?... இப்படி? எல்லாம் கலியுகம். நடப்பவை நடந்து முடியட்டும்.
|
|
 |