தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு: பண்ருட்டி ராமச்சந்திரன்
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி வருவதைக் கண்டித்து இன்று சென்னையில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சைதாப்பேட்டையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இதில் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாட்டு மீனவர்களும் சுதந்திரமாக முன்பு மீன் பிடித்து வாழ்ந்து வந்த நிலை மீண்டும் வர வேண்டும்.
ஆனால் 1974ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில், அதற்கு முரண்பாடாக இரு நாட்டு கடல் எல்லையை வகுத்து, யாரும் மீறக் கூடாது என்பது கண்டனத்துக்குரியது, சட்டவிரோதமானது.
எனவே இப்படிப்பட்ட முரண்பாடானா ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
தமிழ் இனத்தை காப்பாற்ற தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.
தமிழ்நாட்டில் மீனவர் பிரச்சினை மிகப்பெரும் பிரச்சினையாக உருமாறி உள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள இராணுவத்தால் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
மீனவர்கள் பிரச்சினைக்காக இராமேஸ்வரத்தில் விஜயகாந்த் போராட்டம் நடத்தினார். டெல்லியிலும் உண்ணாவிரதம் இருந்தார்.
கடலில் அத்துமீறி மீன் பிடித்தால் மீனவர்களை கைது செய்யலாம். ஆனால் சிங்கள இராணுவம் அடித்து உதைத்து கடலில் போட்டு கொல்கிறது. இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி வந்தது
மும்பையில் 176 பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது பரிதாபமானது. இதற்காக இன்று வரை பாகிஸ்தானுடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம்.
ஆனால் 41 ஆயிரம் தமிழர்கள் அனாதைகளாக ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டார்கள். அதைப்பார்த்து உலகமே இரக்கம் காட்டியது. ஆனால் யாராலும் தடுக்க முடியவில்லை.
1983 ல் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று சொல்லி இலங்கை தமிழர்களை உசுப்பேத்தி விட்டனர். ஆனால் இப்போது தடம் மாறுகிறார்கள்.
உடமைகளை காப்பாற்ற ஒரு வீடு தேவை. அதே போல் ஒரு இனத்தை காப்பாற்ற நாடு தேவை. தமிழ் இனத்தை காப்பாற்ற தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று பேசினார்.
Source: tamilwin